பணம் கேட்ட இளைஞரை இழுத்து போட்டு சரமாரியாக தாக்கிய அதிமுக நிர்வாகிகள் - சேலத்தில் பரபரப்பு..!
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்பாட்டத்தின் போது பணம் கேட்ட இளைஞர் மீது அதிமுகவினர் சராமரியாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணம் கேட்ட இளைஞர் தொந்தரவு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில் சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் சென்று பணம் கேட்டு பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
இளைஞர் சதீஷ் மதுப்போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சதீஷ் அனைவரையும் தொந்தரவு செய்து வந்ததால் ஆத்திரம் அடைந்தனர் அதிமுக நிர்வாகிகள்.
சரமாரியாக தாக்கிய அதிமுக நிர்வாகிகள்
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது கார் முன்பாக சென்று காரை நிறுத்தி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அதிமுக நிர்வாகிகள் இளைஞர் சதீஷை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.