10 வருஷங்களா வீட்டை விட்டு வெளியே வராத தாய், மகள் - குப்பைகளுக்கு நடுவே கொடூரம்!
10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராமல் தாய், மகள் குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய், மகள் செயல்
கோவை, ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ருக்மணி (75). இவரது மகள் திவ்யா (45). இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர்.
வெளிஉலக தொடர்பே இல்லாமல் இருந்துள்ளனர். அதேநேரம், வீட்டையும் சுத்தம் செய்யாமல், குவிந்து கிடந்த குப்பைகளுக்கு நடுவில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மூலம் சமூக ஆர்வலர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனநல ஆலோசனை
அதன்படி, அவர் அங்கு சென்று உரையாடி அவர்களின் நிலையை வீடியோவாக எடுத்துள்ளார். அப்போது சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீரைக் குடித்து வாழ்ந்து வந்தது தெரியவந்தது. வீட்டின் சில அறைகளில் மின்விளக்கு கூட இல்லை. சில இடங்களில் மின்கசிவால் தீயும் பற்றியுள்ளது.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அவர்களின் வீட்டுக்கு சென்று குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். 2 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இரண்டு பெண்களுக்கும் மனநல ஆலோசனை வழங்க குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.