கொரோனா பயத்தால் ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத பெண்கள் : மீட்ட ஊர்மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

tamilnadu-samugam
By Nandhini Jul 22, 2021 05:53 AM GMT
Report

ஆந்திரப்பிரதேச மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் பென்னி (50). இவரது மனைவி ருத்ரம்மா. இவர்களுக்கு, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஜான் பென்னி, அவரது மகன் அதே கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் கடையை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2019ம் வருடம் மார்ச் மாதம் ஜான் பென்னியின் வீட்டு அருகே வசித்து வந்த பெண் ஒருவர் கொரோனவால் திடீரென இறந்துள்ளார். இதனால் பயந்துபோன பென்னியின் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை நிறுத்தியுள்ளனர்.

இதனால், உணவு, காய்கறி, மளிகைப் பொருள் மற்றும் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும் வேலைக்கு ஜான் பென்னி மற்றும் அவரது மகன் சின்னபாபு ஆகியோர் வெளியே சென்று வந்துள்ளனர். கொரோனா பயத்தில் இந்தப் பெண்கள் அக்கம் பக்கத்தினரிடையே கூட பேசுவதை நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஜான் பென்னிக்கு முதல்வரின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பஞ்சாயத்து ஊழியர் ஒருவர் தகவலை சொல்வதற்காக அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்களின் நிலையை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் காவல்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களை மீட்டுள்ளனர்.

சுமார் ஒன்றரை வருடமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த நிலையில், 5 பேரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்துள்ளது. அவர்களை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் மூன்று பெண்களும் சூரிய ஒளி உடலில் படாமல் வாழ்ந்த காரணத்தால், வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருப்பதால், மனநிலை மந்தமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பயத்தால் ஒன்றரை வருடமாக வீட்டை விட்டு வெளியே வராத பெண்கள் : மீட்ட ஊர்மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! | Tamilnadu Samugam