மதம் என பிரிந்தது போதும்..கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை - குவியும் பாராட்டு!
கேரளாவில் கோயில் மற்றும் மசூதிக்கும் ஒரே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது வைரலாகி வருகிறது.
கோயில் மற்றும் மசூதி
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ளது வெஞ்சரமூடு. அந்த பகுதியில் மேலக்குட்டிமூடில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மற்றும் பரயில் மசூதி ஆகியவை அமைத்துள்ளது.
அண்மையில், அம்மன் கோயிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலுக்கு நுழையும் சாலையின் முன் பகுதியில் அடையாள பெயர் பலகை வைக்க கோயில் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஒரே பெயர் பலகை
ஆனால் ஏற்கெனவே, மசூதி சார்பில் வளைவு பெயர் பலகை நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெயர் பலகை வைப்பதில் கோயில் அதிகாரிகள் சிரமத்திற்கு ஆளாகியதை கவனித்த மசூதி நிர்வாகத்தினர் பெயர் பலகையை கோயில் நிர்வாகத்துடன் பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்.
இதையடுத்து, கோயிலின் பெயர் இடதுபுறத்திலும், மசூதியின் பெயர் வலதுபுறத்திலும் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டது. மேலும், கோயில் பெயர் அமைந்துள்ள இடத்தில் 'ஓம்' என்றும், மசூதி பெயர் அமைக்கப்பட்ட இடத்தில் நட்சத்திரம் மற்றும் பிறை சின்னங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்த முகப்பு நுழைவாயிலின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. கோயில் மற்றும் மசூதிக்கு ஒரே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது சமய நல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.