அயோத்தி ராமர் கோயிலில் துப்பாக்கி குண்டு வெடிப்பு - பதறி ஒடிய பக்தர்கள்! நடந்தது என்ன?
அயோத்தி ராமர் கோயிலில் காவலர் ஒருவர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது திடீரென குண்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெடித்த துப்பாக்கி
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அண்மையில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா, கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கோயில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட பிறகு, பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் பிறகு, நாடு முழுவதும் இருக்கக்கூடிய ராம பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்ய அனுதினமும் அலை கடலென திரண்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், அதனை கட்டுப்படுத்த ராமர் கோயில் வளாகத்தில் போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒருவர் துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடந்தது என்ன?
பயங்கர சத்தத்துடன் துப்பாக்கி முழங்கியதை கேட்டதும் பக்தர்கள் சிதறி ஓடினர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயமடைந்த காவலரை, மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவலரின் மார்பின் இடதுபுறம் தோட்டா பாய்ந்துள்ளதாகவும், தோட்டா ஆழமாக இறங்கியுள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மேற்கொண்ட விசாரணையில்,கடந்த 6 மாதங்களாக ராம் பிரசாத் என்பவர் ராமர் கோயிலில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வந்துள்ளார். இன்று அவரது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் குண்டு வெடித்து அவரது உடம்பில் பாய்ந்ததாக தெரியவந்தது. மேலும், போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.