ஷேர் ஆட்டோ'ல போறீங்களா..? மக்களே உஷார் - நூதனமாக திருடும் அம்மா - மகன்கள்
ஷேர் ஆட்டோவில் பயணிப்பவர்களை குறித்து வைத்து சென்னையை சேர்ந்த அம்மா மகன்கள் கொள்ளையடித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷேர் ஆட்டோவில் திருட்டு
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலில், பல தரப்பட்ட மக்களும் ஒரு இடத்தில் இருந்து மற்றுமொரு இடத்தை சென்று சேர தற்போது பயன்படுத்தி வரும் முக்கிய போக்குவரத்தாக ஷேர் ஆட்டோ அமைந்துள்ளது.
இதில், பயணிப்பவர்களை குறித்து வைத்து கும்பல் ஒன்று நூதன திருட்டில் ஈடுப்பட சம்பவம் தொடர்பான செய்தி வெளிவந்துள்ளது. சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த மகேந்திர குமார் பட்டேல்(45) பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து கடைக்கு போக ஷேர் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆட்டோவை விட்டு இறங்கியவுடன் செல்போன் காணாமல் போனதை அறிந்து கொண்ட அவர், ஏழுகிணறு போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது மகேந்திர குமார் பயணித்த ஆட்டோ சந்தேகப்படும் படி, வண்ணாரப்பேட்டை பழைய ஜெயில் ரோடு பகுதியில் சுற்றியுள்ளது.
நூதனமாக
அப்போது ஆட்டோவில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. திருவொற்றியூரை சேர்ந்த சுகுணா (59) மற்றும் அவரது மகன்களான ரமேஷ் (32), பெருமாள் (24) ஆகியோர் ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து அதில் ஏறும் பயணிகளிடம் நூதன முறையில் செல்போன் மற்றும் பணத்தை திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கூட்டநெரிசளில் மக்களிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்கும் அவர்கள், அப்படி திருடிய செல்போனை பர்மாபஜாரில் விற்று காசாக மாற்றியுள்ளனர்.