பழனி பஞ்சாமிருதத்தில் கருத்தடை மாத்திரை கலப்பு? இயக்குனர் மோகன் ஜி கைது!
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக சொன்ன மோகன் ஜி கைதானார்.
பஞ்சாமிருதம்
திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமா இயக்குனர் மோகன் ஜி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருந்தார்.
அதில் தொடர்ந்து பேசிய அவர், "நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்ததாக செவி வழிச் செய்தியாக கேள்விப்பட்டேன்.
மோகன் ஜி
அது தொடர்பான செய்தியை வெளியே வர விடாமல், வேறொரு வழக்கு போட்டு அதனை முடித்து விட்டார்கள். எனக்கு அங்கு வேலை செய்யும் மக்கள், கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக தெரிவித்தனர்.
அதில் வேலை செய்யும் யாரோ இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று கூறினர். இந்த மாதிரியான விஷயங்கள் எல்லா இடத்திலேயுமே நடக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்திருப்பதாக கருத்து தெரிவித்த தமிழ் சினிமா இயக்குனரான மோகன் ஜி-யை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அவரது காசி மேடு இல்லத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.