மும்பை அணியில் மீண்டும் புகையும் நெருப்பு - பாண்ட்யாவுக்கு எதிராக திரும்பிய வீரர்!
மும்பை இந்தியன்ஸ் வீரர் முகமது நபிக்கு கேப்டன் ஹர்திக் ஒரு ஓவர் கூட பந்து வீசும் வாய்ப்பை வழங்கவில்லை
ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் அவர் சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.
தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. மேலும், ஒவ்வொரு போட்டியின் போதும் ரோஹித்-பாண்ட்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாண்ட்யா எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் மும்பை போராடி வென்றது.
முகமது நபி
இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபிக்கு கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட பந்து வீசும் வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஆப்கானிஸ்தான் ரசிகர் ஒருவர்,
தனது இன்ஸ்டாகிராமில் "சில நேரங்களில் உங்களுடைய கேப்டன் எடுக்கும் முடிவுகள் மிகவும் வேடிக்கையாகவும், மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதாகவும் உள்ளது. இன்று முகமது நபி பந்து வீசவில்லை. இருப்பினும் கேம் சேஞ்சரான அவர் முக்கியமான நேரத்தில் 2 கேட்ச்கள் பிடித்து, 1 ரன் அவுட் செய்து வெற்றியில் பங்காற்றினார்” என்று பதிவிட்டார்.
இந்த ரசிகரின் பதிவை முகமது நபி தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்தார். இந்த பதிவின் மூலம் பாண்டியா மீது முகமது நபி அதிருப்தியில் இருப்பது தெளிவாக தெரிகிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.