மோடி ஹாட்ரிக் படைப்பது உறுதி- தென் மாநிலங்களிலும் BJP தான்....வானதி ஸ்ரீனிவாசன்!!
வரும் 2024-ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைப்பார் என வானதி ஸ்ரீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வானதி அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி, வடக்கு - தெற்கு என நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள் என தலைப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தெலங்கானாவில் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக அரசு 2024 மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரப் போவதை, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன.
எதிர்க்கட்சிகளும், தீவிர பாஜக எதிர்ப்பாளர்களும்கூட 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக ஆட்சிதான், மோடி தான் பிரதமர் என பேசத் தொடங்கியுள்ளனர். நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள பெரும் செல்வாக்கை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகளும், நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் ஊடகங்களில் கருத்து சொல்பவர்களும், சில ஊடகவியலாளர்களும், தென் பாரதம் பாஜகவை நிராகரித்து விட்டது. வட பாரதத்தில்தான் பாஜகவுக்கு, மோடிக்கு செல்வாக்கு என திட்டமிட்ட அவதூறு பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
2024-யிலும் ஆட்சி அமைப்போம்
ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் பாஜக தான் முதன்மை கட்சியாக உள்ளது. இந்த 6 மாநிலங்களிலும் 130 மக்களவைத் தொகுதிகள் (தமிழ்நாடு - 39, கேரளம் - 20, கர்நாடகம் - 28, ஆந்திரம் - 25, தெலங்கானா - 17, புதுச்சேரி - 1) உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 29 (கர்நாடகம் 25, தெலங்கானா 4) தொகுதிகளிலும், காங்கிரஸ் 28 (கேரளம் -15, தமிழ்நாடு 8, கர்நாடகம் - 1, புதுச்சேரி - 1, தெலங்கானா 3) தொகுதிகளிலும் வென்றன.
திமுகவுக்கு 24, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 22, பி.ஆர்.எஸ். கட்சிக்கு 9 எம்.பி.க்களும் உள்ளனர். தென் பாரதத்திலும் அதிக எம்.பி.க்களைக் கொண்ட முதன்மைக் கட்சி பாஜகதான். 2019 மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 51.75 சதவீதம், தெலங்கானாவில் 19.54 சதவீதம், கேரளத்தில் 15.64 சதவீத வாக்குகளைப் பாஜக பெற்றது. இப்படி தென் மாநிலங்களிலும் பாஜக மக்களின் பேராதரவைப் பெற்று வரும் நிலையில் தென் மாநிலங்களின் மக்கள் பாஜகவை ஏற்கவில்லை என திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும் என கடந்த 6 மாதங்களுக்கு மேலாக செய்து வந்த பிரசாரத்தை, அம்மாநில மக்கள் முறியடித்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். இதிலிருந்து பாடம் கற்காமல், வடக்கு, தெற்கு என பிரிவினையை ஏற்படுத்தி, பாஜகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தி விடலாம் என முயற்சிக்கிறார்கள். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநில மக்களைப் போல, தென் மாநிலங்களின் மக்களும் இந்த பிரிவினை சதியை முறியடிப்பார்கள். பாஜகவை வெற்றி பெறச் செய்வார்கள்.
தென் மாநிலங்களிலும் பாஜக தான் முதன்மை கட்சி
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 6, 2023
வடக்கு - தெற்கு என நாட்டு மக்களைப் பிரிக்கும் சதியை தென் மாநில மக்கள் முறியடிப்பார்கள்.
டிசம்பர் 3-ம் தேதி ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில்… pic.twitter.com/V9YYhvTbHl
கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே, வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் கர்நாடகம், தெலங்கானாவில் பாஜக 90 சதவீதத்திற்கும் அதிகமாக இடங்களில் வெல்வது உறுதி. தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், புதுச்சேரியிலும் பாஜகதான் அதிக இடங்களிலும் வெல்லும். வரும் 2024-ல் 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவது உறுதி. அதைதான் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டியிருக்கின்றன.