ஜி7 மாநாடு; இந்த வரலாற்று வெற்றி.. இந்திய மக்கள் வழங்கிய ஆசி - பிரதமர் மோடி பெருமிதம்!
ஜி7 உச்சி மாநாட்டில் மக்களவைத் தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
ஜி7 மாநாடு
நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் 290க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. இதை அடுத்து பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
இந்த நிலையில், இத்தாலியில் அபுலியாவில் ஜி7 மாநாடு நடைபெற்றது. அதன் றப்பு அழைப்பாளராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜி7 உறுப்பு நாடுகளின் பிற தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பிரதமர் மோடி,
செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் தொடர்பாக தனது கருத்துகளை தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் இந்தியாவின் மக்களவை தேர்தல் குறித்து பிரதமர் மோடி பேசினார்.
மோடி பெருமிதம்
அதில் அவர், “கடந்த வாரம் உங்களில் பலர் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பிஸியாக இருந்தீர்கள். சில நண்பர்கள் வரவிருக்கும் காலங்களில் தேர்தல் உற்சாகத்தை அடைய உள்ளனர்.இந்தியாவிலும் சில மாதங்களுக்கு முன்பு அது தேர்தல் காலம். இவ்வளவு பெரிய தேர்தல் முடிவும் சில மணி நேரங்களிலேயே அறிவிக்கப்பட்டது.
இது உலகில் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவாகவும், மனிதகுல வரலாற்றில் மிகப்பெரியதாகவும் இருந்தது. ஜனநாயகத்தின் தாய் என்ற நமது பண்டைய விழுமியங்களுக்கு இது ஒரு உயிருள்ள எடுத்துக்காட்டு. இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்திருப்பது எனது அதிர்ஷ்டம்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் இது முதல்முறையாக நடந்துள்ளது. இந்த வரலாற்று வெற்றியின் வடிவில் இந்திய மக்கள் வழங்கிய ஆசிகள், ஜனநாயகத்தின் வெற்றியாகும். இது ஒட்டுமொத்த ஜனநாயக உலகத்தின் வெற்றி”இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார்.