என்கிட்ட ஒரு சைக்கிள் கூட இல்லை - தேர்தல் பிரச்சாரத்தில் நெகிழ்ந்த பிரதமர் மோடி !!
தன்னிடம் சொந்தமாக சைக்கிள், வீடு கூட இல்லை என தேர்தல் பிரச்சாரத்தில் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
மோடி பிரச்சாரம்
நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 19-ஆம் தேதி முடிந்த நிலையில், அடுத்த கட்ட தேர்தல் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. 3-ஆம் கட்டமாக தேர்தல் வரும் மே 7-ஆம் தேதி 94 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
நாட்டின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் தேர்தல் முடிவுற்ற நிலையில், கடந்த சில நாட்களாக மதவாத அரசியல் பேச்சுகளும், இந்தியா - பாகிஸ்தான் போன்ற பேச்சுக்கள் அதிகளவில் பேசப்பட்டன.
நாட்டின் பிரதமரான மோடியும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வரும் சூழலில், ஜார்க்கண்ட் மாநில பலமு என்ற பகுதியில் அவர் இன்று ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரித்தார். அதன் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் வாக்களித்து ஊழல் காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுத்தனர்.
சைக்கிள் கூட இல்லை
ஜம்மு காஷ்மீரில் அதன் விளைவாக 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டது. உலக அரங்கில் இந்தியா அழுது கொண்டிருந்த காலம் முடிந்தது என்று கூறி, பாகிஸ்தான் நாட்டின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை பிரதமராக நினைக்கிறார்கள் என்றார்.
10 ஆண்டு பாஜக ஆட்சியில் நாட்டின் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, தனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை என்று தெரிவித்து முதல்வராக, பிரதமராக இருந்த தன் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றார்.
ஆனால், ஊழல் செய்து வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளனர் என்றும் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.