அரசியலிலும் அவர் கேப்டன் தான் - விஜயகாந்திற்கு பிரதமர் மோடி புகழாரம்..!!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி திருச்சி நிகழ்வில் நினைவு கூர்ந்துள்ளார்.
திருச்சியில் பிரதமர்
நாட்டின் பிரதமர் மோடி இன்று திருச்சி வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். திருச்சி விமான நிலைய முனைய திறப்பு நிகழ்ச்சியில் அவர் தற்போது பங்கேற்று சிறப்புரையாற்றி வருகிறார்.
அப்போது அண்மையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, எனது தமிழ் குடும்பமே..உங்க அனைவரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தனது உரையை துவங்கினார்.
அரசியலிலும் கேப்டன்
தொடர்ந்து பேசிய அவர், 20 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழக மக்களுக்காக கொண்டுவந்துள்ளோம் என கூறி, துவங்கிவைக்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தெரிவித்தார்.
கடந்த ஆண்டின் இறுதியில் தமிழகம் மழை, வெள்ள பாதிப்புகளால் பெரும் வலிகளை அனுபவித்தது என குறிப்பிட்ட அவர், இந்த கஷ்ட காலத்தில் மத்திய அரசு தமிழக மக்களுடன் துணை நிற்கிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கலை தெரிவித்து கொண்டு, அவரின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமின்றி அரசியலுக்கும் மக்களுக்கும் இழப்பு தான் என கூறினார்.
சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர் கேப்டன் என புகழாரம் சூட்டிய பிரதமர், திரைப்படங்களில் அவரது செயல்பாடுகளின் மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.