"பரம்பரை வரி" - இறந்தாலும் வரி விதிக்கும் காங்கிரஸ்!! பிரதமர் மோடி குற்றச்சாட்டு
சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நடுத்தர மக்கள் மீது அதிக வரியையும் விதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக சாடினார்.
தேர்தல் பிரச்சாரம்
மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் தலைவர்கள் ஒருவர் மீது மற்றொருவர் கடும் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள்.
பிரதமர் மோடி ராஜஸ்தான் தேர்த பரப்புரையில் ஒரு மதத்தினரை குறித்து அவதூறாக பேசினார் என எதிர்க்கட்சிகள் தீவிரமாக குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், உண்மையை சொல்லியுள்ளதால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு செய்வதாக பிரதமர் பதிலடி கொடுத்துள்ளார்.
பரம்பரை வரி
இன்று சத்தீஸ்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், நடுத்தர மக்கள் மீது பரம்பரை வரியை விதிக்க காங்கிரஸ் விரும்புவதாக குற்றம்சாட்டினார்.
பரம்பரை வரி விதிப்போம் என்று காங்கிரஸ் சொல்கிறது. கடினமாக உழைத்து சம்பாதித்த செல்வங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்காது என்ற அவர், பெற்றோர்கள் மூலம் வரும் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிப்போம் என காங்கிரஸ் கூறுவதாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி உங்களின் சொத்துக்களை பறித்துவிடும் என்று கூறி, நீங்கள் வாழும் வரை உங்கள் மீது அதிகப்படியான வரிகளை விதித்து, இறந்த பிறகும் பரம்பரை வரி என்ற சுமையையும் விதிப்பார்கள் என்றார்.