பாகிஸ்தானில் மோடி பிரியாணியே சாப்பிடுகையில், இந்தியா அங்கு விளையாடக்கூடாதா? தேஜஸ்வி தாக்கு!
பாகிஸ்தானில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் விளையாடக்கூடாது என தேஜஸ்வி யாதவ் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐசிசி சாம்பியன் டிராபி
இந்திய கிரிக்கெட் அணி பல நாடுகளுடன் ஒருநாள், டெஸ்ட், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடுவது இல்லை.
ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில், ஐசிசி சாம்பியன் டிராபி போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை பாகிஸ்தான் ஏற்று நடத்துகிறது.
தேஜஸ்வி கருத்து
ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா, பாகிஸ்தான் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்தியா போட்டியை பாகிஸ்தானில் நடத்தாமல் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது ஆனால் பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ், ‛‛விளையாட்டுடன் அரசியலை கலப்பது நல்ல விஷயமாக நான் பார்க்கவில்லை. பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடினால் தான் என்ன?
பாகிஸ்தான் சென்று பிரதமர் மோடி பிரியாணி சாப்பிடும்போது பாகிஸ்தானில் நடக்கும் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா சென்றால் தான் என்ன?” என கேள்வி எழுப்பி உள்ளார்.