விண்வெளிக்கு செல்லும் பிரதமர் மோடி? இஸ்ரோ சேர்மன் வெளியிட்ட முக்கிய அப்டேட்
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் பேசியுள்ளார்.
ககன்யான்
சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த ஆண்டு நிலவில் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதனை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு செல்ல உள்ள 4 வீரர்களான விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோரை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
சோம்நாத்
இந்நிலையில், ககன்யான் திட்டம் குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், பிரதமர் மோடிக்கு உள்ள பல பொறுப்புகளில் முதன்மையானது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதாகும். ககன்யான் திட்டத்தின் மூலம் முதன் முதலில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் போது அவர்கள் ஒரு நாள் முழுவதும் விண்வெளியில் இருப்பார்கள்.
இந்த நேரத்தில் பூமியை 16 முறை அவர்கள் சுற்றி வருவார்கள். இந்த பயணத்தின்போது பல்வேறு சோதனைகள் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ககன்யான் திட்டத்தில் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். அதில் மூன்று முக்கியமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் பணி, பூமியின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி சுற்றி வருவது. இதற்காக ஆளில்லா விண்கலத்தை ஏவ இருக்கிறோம். இரண்டாவதாக விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் கருவிகள் குறித்த சோதனை. இறுதியாக, ஏவுதளத்தை சரிபார்த்தல்.
பிரதமர் மோடி
வரும் 2028ம் ஆண்டில் விண்வெளியில் இந்தியா தனக்கென சொந்தமாக ஆய்வு மையத்தை அமைக்கும். இந்த ஆய்வு மையம் 'பாரதிய அந்தரிஷ்' என்கிற பெயரில் அழைக்கப்படும் எனக் கூறினார்.
பிரதமர் விண்வெளிக்கு பயணிக்க முடியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இந்தியாவின் முதல் மனிதப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளிக்குச் செல்ல முடியும்" என பதிலளித்தார்.
இதுவரை வெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய இந்தியா ககன்யான் திட்டத்தின் மூலம் முதன் முறையாக இந்திய ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.