மகளிர் தினம்; சமையல் எரிவாயு விலை குறைப்பு..பிரதமருக்கு நன்றி - அண்ணாமலை உருக்கம்!
மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மோடி அறிவிப்பு
இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்பு சலுகையாக சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைப்பதாக தெரிவித்துளார்.
இது தொடர்பாக அவரது வலைதள பக்கத்தில், “இன்று மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும். குறிப்பாக பெண் சக்திக்கு வலிமை தரும்.
சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்குவதன் மூலம் குடும்பங்களின் நலனை உறுதி செய்வதோடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலையும் உருவாக்கலாம். பெண்களுக்கு வலிமை சேர்ப்போம் என்ற எங்களின் வாக்குறுதிக்கு இணங்கவும், அவர்களின் வாழ்தலை எளிதாக்குவதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை
இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், சர்வதேச மகளிர் தினமான இன்று, நமது நாட்டில் பல கோடி பெண்கள் பயன்பெறும் வகையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாகவும் பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுமார் 10 கோடி உஜ்வாலா பயனாளிகளுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் மானியம், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற நேற்றைய அறிவிப்பும், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைக்கப்படும் என்ற இன்றைய அறிவிப்பும், நமது தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் சிறந்த மகளிர் தின பரிசாக அமைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.918 ஆக இருந்துவந்த நிலையில், தற்போது ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818-க்கு விற்கப்படும்.