நெருங்கும் தேர்தல்; கமல்ஹாசன் அவசர ஆலோசனை - தீருமா தொகுதி பங்கீடு சிக்கல்?
நாளை மறுநாள் 7-ம் தேதி கமல்ஹாசன் சென்னையில் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.
திமுக-மநீம
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வரும் சூழலில், இந்திய தேர்தல் ஆணையமும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆனால் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறாமலேயே உள்ளது.
அவசர ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை தொகுதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அந்த தொகுதியை கேட்பதால் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் 7-ம் தேதி கமல்ஹாசன் சென்னையில் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.
மேலும், இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் திமுக கூட்டணியில் நீடிக்கும் சிக்கல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதனால் இந்த ஆலோசனை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.