திமுக கட்சி அல்ல.. கம்பெனி; வாரிசு அரசியல் என்றால் இதுதான் - விளக்கம் கொடுத்த ஈ.பி.எஸ்!
ஒரு குடும்பத்தின் கைக்குள் ஒரு கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்களது கொள்கை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க மதுரை வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைகின்றனர்.
ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது அவர்களது ஜனநாயகம். போகின்றவர்களை யாரும் தடுக்க முடியாது. இது ஜனநாயக நாடு. கட்சி மாறுவது அவரவர் மன நிலையை பொறுத்தது.
தேர்தலில் வேட்பாளருக்கு ஒதுக்கப்படும் சீட் அடிப்படையில் வாரிசு அரசியலை தீர்மானிக்க முடியாது. திமுகவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர். அது கட்சி அல்ல. ஒரு கம்பெனி.
பொறுத்திருந்து பாருங்கள்
தலைமைக்கு யார் வருகின்றனர் என்பதை பொறுத்துதான் முடிவாகும். திமுகதான் வாரிசு அரசியல் செய்கிறது. அது ஒரு குடும்பக் கட்சி. திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அதற்கு பிறகு அவரது மகன் உதயநிதி.
இதற்கு பெயர்தான் வாரிசு அரசியல். ஒரே குடும்பத்தின் கையில் ஒரு கட்சி இருக்கிறது. ஒரு குடும்பத்தின் கைக்குள் ஒரு கட்சி போகக் கூடாது என்பதுதான் எங்களது கொள்கை. அதிமுகவில் சாதாரண தொண்டன் என்னை போன்று உயர்ந்த பொறுப்புக்கு வரமுடியும்.
திமுகவில் கூட்டணி குறித்து தற்போது வரை பேசிக்கொண்டு தான் வருகின்றனர். இன்னும், கூட்டணி பேச்சுவார்த்தை முடிவாகவில்லை. திமுக கூட்டணியில் இருந்து எத்தனை கட்சிகள் வெளியே செல்கிறார்கள் என பொறுத்து இருந்து பாருங்கள்" என்றார்.