பெண்கள் அழகாக இருந்தால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!
பெண்கள் அழகாக இருந்தால் தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் பேசிய சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கல்லூரி கனவு நிகழ்ச்சி
திண்டுக்கல்லில் பள்ளி கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, வேலுச்சாமி எம்பி, வேடசந்தூர் எம்.எம்.ஏ. காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ காந்திராஜன் பேசியபோது, பெண்கள் அழகாக இருந்தால் கம்பெனியில் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
எம்எல்ஏ சர்ச்சை பேச்சு
எம்எல்ஏ காந்திராஜன் பேசியதாவது:- இப்போதுள்ள மல்டிநேசனல் கம்பெனிகளில் வேலைவாய்ப்பு கொடுப்பது எப்படியென்றால், நீங்கள் வாங்கியிருக்கும் மார்க்கையெல்லாம் பெரும்பாலும் பார்ப்பதில்லை.
உங்களின் கல்வித்தகுதி, எந்த துறையில் ஆர்வம், என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை பார்த்தாலும், பிரதானமாக உங்களிடம் எதிர்பார்ப்பது ஆங்கில புலமையைத்தான். உங்களிடத்தில் ஆங்கில புலமை இருக்கிறதா? ஆங்கிலத்தில் பேசும் அறிவு இருக்கிறதா? என்பதைத்தான் முதலில் பார்க்கிறார்கள்.
தெளிவாக விரைவாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா? என்பதைத்தான் மல்டிநேசனல் கம்பெனிகள் பார்க்கின்றன.
சரளமாக ஆங்கிலத்தில் பேசும் திறமை இருந்தால்தான் அதிகமான சம்பளம் கிடைக்கும், மல்டிநேசனல் கம்பெனியில் வேலை கிடைக்கும்.
பெண்களாக இருந்தால் அழகாக இருக்கவேண்டும் என்று கம்பெனிகாரர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.