தமிழகத்திற்கு உரிய நீரை பெறுவோம் - அனைத்து கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்று குழுவின் ஆணையின் படி, நமக்கு கிடைக்க வேண்டிய குறைந்தளவு தண்ணீரை கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது.
இதனை முறியடித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்வதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை ஒரு ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். அதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்கு சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் கிடைக்கவேண்டிய நீரின் அளவை சென்ற ஆண்டு கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றத்தை நாடி, நாம் அதன் பிறகு நீரை பெற்றோம்.
இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கும் சூழ்நிலையிலும், கர்நாடக அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவுகளை நான் தீர்மானமாக இப்போது படிக்கிறேன்.
தீர்மானம் 1 : காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்று தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர முடியாது என அறிவித்துள்ள கர்நாடக அரசுக்கு இந்த அனைத்து கட்சி கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி, தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை உடனடியாக விடுவித்தாக கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திற்கு இந்த அனைத்து கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் ஆணையின் படி, தமிழ்நாடு பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு மூச்சோடு மேற்கொண்டு காவிரி டெல்டா விவாசியிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளிக்கிறேன்.