தெற்கில் போல இந்தியாவிற்கும் விடியல் பிறக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக இளைஞர் அணி 2-வது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்புரையாற்றின முதலமைச்சர் முக ஸ்டாலின், தெற்கில் விடியல் பிறந்தது போல் விரைவில் இந்தியாவிற்கும் விடியல் பிறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
முதலமைச்சர் சிறப்புரை
சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக இளைஞரணியை பார்க்குமபோது மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டு,மாநாட்டை பார்க்கும்போது 20 வயது குறைந்ததுபோல் இருக்கிறது என்றார்.
1980-இல்மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்ட போது தனக்கு 30 வயது என கூறிய முதலமைச்சர், தன்னை வளர்த்து உருவாக்கியது இளைஞரணி என்று கூறி, திமுகவிற்குள் புதிய ரத்தத்தை பாய்ச்சியது இளைஞரணி என்று தெரிவித்து திமுக இளைஞரணி தனது தாய் வீடு என பூரிப்புடன் கூறினார்.
மாநாட்டை சிறப்பாக நடத்திய அமைச்சர் நேருவை புகழ்ந்த முதலமைச்சர் நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு என்று கூறினார். 75 ஆண்டுகள் ஆகியும் திமுக கம்பீரமாக நிற்க காரணம் நமது கொள்கை என்ற உரம் என்று சுட்டிக்காட்டி, நமது மொழி, கலாச்சாரத்தை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
மக்களை ஏமாற்றுகிறார்கள்
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது நமது முழுக்கம் என்று தெரிவித்த முதலமைச்சர், எல்லா மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை என்று கூறி, பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் மாநில சுயாட்சி தேவை என்றார்.
மத்திய அரசுக்கு பணம் தரும் ஏடிஎம் இயந்திரங்களாக மாநில அரசுகளை மாற்றிவிட்டனர் என மத்திய பாஜக அரசை சாடிய முதலமைச்சர், வெள்ள நிவாரண நிதியை பலமுறை கேட்டும் இன்னும் தரவில்லை என்று கூறி, திருக்குறளை சொல்லி, பொங்கலை கொண்டாடி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றார்.
ஆனால், இது பெரியார் மண், இங்கு அவர்களது எண்ணம் பலிக்காது என உறுதிபட கூறி, இந்தியா கூட்டணி ஆட்சி என்பது மாநிலங்களை மதிக்கும் ஆட்சியாக இருக்கும் என்று சுட்டிக்காட்டி, தெற்கில் விடியல் பிறந்தது போல், விரைவில் இந்தியாவிற்கு விடியல் பிறக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.