யார் அந்த சார்? ஆதாரம் உள்ளதா? சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதுதொடர்பாக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த பல்கலைக்கழகத்தின் பெயரை சொல்லி அந்த பெயரை களங்கப்படுத்த வில்லை. அங்கு நடைபெற்றிருப்பது மாபெரும் கொடூரம்.
இது குறித்த அக்கறையோடு சில உறுப்பினர்கள் பேசுகிறார்கள். ஒரு உறுப்பினர் ஆட்சி மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் குற்றவாளி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளியை காப்பாற்ற முடிவு செய்திருந்தால் அரசை குற்றம் சொல்லலாம்.
குற்றவாளியை கைது செய்த பின்னரும் அரசியல் ஆதாயத்திற்காக குறை சொல்லப்படுகிறது. முதல் தகவல் அறிக்கை கசிந்ததை குறை சொல்கின்றனர். ஆனால் அதற்கு காரணமான தேசிய தகவல் மையமே அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
பொள்ளாச்சி சம்பவம்
யார் அந்த சார்? என கேட்குறீங்க. எதிர்க்கட்சி கிட்ட உண்மையாகவே ஆதாரம் இருந்தா புலனாய்வு குழு கிட்ட சொல்லுங்க. சிசிடிவி இயங்கவில்லை என கூறுகிறார்கள். சிசிடிவி காட்சியை கொண்டே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். அரசை பாராட்ட மனம் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. வீண் பழி சுமத்த வேண்டாம்.
கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்பதை நினைத்து பாருங்கள்? பெண்களின் பாதுகாவலர்களாக பேசுபவர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள். பொள்ளாச்சி சம்பவத்தில் அன்றைய முதலமைச்சர் சார் என்ன செய்து கொண்டிருந்தார். சிபிஐ விசாரணைக்கு பிறகே அந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளியாகின.
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. 100 சார் கேள்விகளை அதிமுகவை பார்த்து என்னால் கேட்க முடியும். பெண்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திய ‘சாருங்க' எல்லாம் ‘யார் அந்த சார்?' என பேட்ஜ் அணிந்துகொண்டு பேரவைக்கு வருகிறார்கள்" என பேசினார்.