கூடுதல் நிவாரணம்...கல்வி செலவை அரசே ஏற்கும்!! கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் பதில்
சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். அதில் சில பகுதிகள் வருமாறு,
எதிர்க்கட்சித் தலைவரும் அவைக்குள் இருந்து கருத்துகளை தெரிவித்திருக்கலாம், ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர் வெளிநடப்பு செய்துவிட்டார் என குற்றம்சாட்டினார். விஷச்சாராயதினால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
திருச்சி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து 57 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மருந்துகள் தேவைப்படும் நிலையில், வெளிச்சந்தையில் இருந்து மருந்துகளை வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் இருந்து விஷச் சாராயம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சாராயம் விற்றவர்களிடம் இருந்து சுமார் 200 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- பெற்றோரில் ஒருவரை இழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் வைப்பு தொகை வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்ச வைப்புத் தொகை வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் தலா ரூ.5000 வழங்கப்படும்.
- பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவை தமிழக அரசே ஏற்கும்.