இருட்டில் அமர்ந்து அமாவாசையை எண்ணுகிறார் பழனிசாமி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
விளாசல் எடப்பாடி பழனிசாமி இன்னொரு தலைவரின் அறிக்கையை copy - Paste அறிக்கை விடுகிறார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக சிவகங்கை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த உரையில், சிவகங்கை சீமையை வளர்த்ததில் கழக ஆட்சிக்கு பெரும் பங்கு உண்டு. சிவகங்கை மாவட்டத்திற்கு, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம், அரசு மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், புதிய அரசுப்பள்ளிகள் என கழக ஆட்சியில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகள்
ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு மனிதரையும் நாடிச்சென்று உதவுவதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு. அதனால்தான் உங்கள் ஒவ்வொருத்தரின் குடும்பத்திலும், அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக, மகனாக, உற்றநேரத்தில் உதவக்கூடிய உறவாக, உடன்பிறப்பாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.1753 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் கூட்டுக் குடிநீர்த் திட்ட பணிகள் விரைவில் நிறைவடையும். காரைக்குடியில் 750 குடியிருப்புகள், மினி விளையாட்டு அரங்கம், ரூ.35 கோடி மதிப்பீட்டில் நியோ ஐடி பூங்கா, ரூ.100 கோடி மதிப்பீட்டில் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
திராவிட மாடல் ஆட்சியில் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டங்களை புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டு அறிவிக்கின்றோம். கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டிய பொறுப்பு எங்களிடம் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி
ஆனால் இந்த அறிவிப்புகளை பொறுத்துக்கொள்ள முடியாத பழனிசாமி வாய்க்கு வந்தபடி புலம்பி கொண்டிருக்கிறார். பழனிசாமி கூறும் குற்றச்சாட்டுகளை அவரால் நிரூபிக்க முடியுமா? வாய்ச்சவடால் விடும் பழனிசாமி 2011 - 2016 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தேதி மற்றும் அரசாணையை எண்களோடு பட்டியலிட்டு வெளியிட தயாரா? 10 ஆண்டுகள் ஆட்சியில் தமிழ்நாட்டை அதளபாதாளத்திற்கு தள்ளியது தான் அதிமுக ஆட்சி.
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை மீறியே தமிழகத்தில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று காலண்டரை கிழிச்சுட்டு இருக்காரு எடப்பாடி பழனிசாமி. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிட்டு இருக்கட்டும் பரவாயில்ல அது நமக்கும் தேவையும் இல்லை. நாம் நம்முடைய திட்டங்களின் மூலம் மக்களின் மகிழ்ச்சியை மட்டும் எண்ணிப்பார்ப்போம்.
எடப்பாடி பழனிசாமி இன்னொரு அரசியல் கட்சித் தலைவரின் அறிக்கையை அப்படியே copy - Paste அறிக்கை விடுகிறார். அதையே பேசியும் வருகிறார். இதனை பல பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. மக்கள் அளிக்கும் ஆதரவில், உதயசூரியன் ஒளியில் தொடர்ந்து தமிழ்நாட்டை திமுகதான் என்றும் ஆளும்" என பேசினார்.