மத்திய அரசு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸ் - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
தமிழ்நாட்டிற்கு நிதியும் இல்லை, நீதியும் இல்லை என ஒதுக்கிவிட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நெல்லை சுற்றுப்பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று(06.02.2025) திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். நேற்று கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள டாடா பவர் சோலார் தனியார் நிறுவனம், பாளையங்கோட்டை காய்கறி சந்தைகளை என பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து இன்று(07.02.2025) தாமிரபரணி - கருமேனியாறு - நம்புயாறு இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.77.02 கோடி மதிப்பிலான மெகா உணவு பூங்கா ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
மு.க.ஸ்டாலின்
இதனை தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கிய நகரமாக இருந்த ஊர் திருநெல்வேலி. திமுக ஆட்சியில்தான் நெல்லையப்பர் கோவிலின் தெற்கு, வடக்கு வாசல் திறக்கப்பட்டது.
நெல்லையப்பர் கோவிலில் வரும் நவம்பர் மாதத்திற்குள் வெள்ளி தேர் ஓடும். தமிழக வரலாற்று பெருமைக்கு அடையாளம் நெல்லை மண்தான். திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக இரு சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். பாளையங்கோட்டையில் Y வடிவிலான ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
வெள்ள நிவாரணம்
2023ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எவ்வளவு பாதிப்புகளை சந்தித்தது என்று அனைவருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டோம். 2 மத்திய அமைச்சர்கள் வந்து பார்வையிட்டார்கள்.
ஆனால் மத்திய அரசு இடைக்கால நிதியை கூட கொடுக்கவில்லை. இருப்பினும் மாநில அரசின் நிதிகளை வைத்து, நிவாரணப் பணிகளை நாம் செய்தோம். தொடர்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். பாராளுமன்றத்தில் பேசினோம். ஆனால் நீதிமன்றம் சென்ற பிறகுதான் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை, ஒன்றிய அரசு அறிவித்தது.
நாம் ஒன்றிய அரசிடம், ரூ.37,907 கோடி நிதி தர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், ரூ. 276 கோடிதான் ஒன்றிய அரசு வழங்கியது. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காடு கூட கொடுக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் கூட நாம் கேட்ட நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.
அல்வா கொடுக்கும் ஒன்றிய அரசு
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒதுக்கிவிட்டார்கள். இந்திய வரைப்படத்தில் தமிழ்நாடு இருந்தால் போதுமா? மத்திய பட்ஜெட்டில் இருக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க வந்தால் மட்டும் போதும் என நினைக்கிறார்களா?
இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜகவிடமிருந்து எந்த பதிலும் வராது. இதுவரை திருநெல்வேலி அல்வாதான் உலகம் முழுவதும் ஃபேமஸ். ஆனால் இப்போது ஒன்றிய அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு கொடுக்கும் அல்வாதான் ஃபேமஸாக உள்ளது" என பேசினார்.