அனைத்து பள்ளிகளிலும் சூழலியல் மன்றம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
காலநிலைக்கு என்று கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
காலநிலை உச்சி மாநாடு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2 நாள் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டை இன்று தமிழக முதல்வர்(04.02.2025) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
காலநிலை மாற்றம்
அவர் ஆற்றிய உரையில், "காலநிலை மாற்றம்தான் இன்று உலகநாடுகளும், மானுட சமுதாயமும் எதிர்கொண்டிருக்கிற மிகப்பெரிய சவால். மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் அரசால் மேற்கொள்ளப்படும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நம்மை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியாக இந்த மாநாடு நடக்கிறது. துபாய் வெள்ளம், லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்து, வயநாடு நிலச்சரிவு, திருவண்ணாமலை மண்சரிவுக்கும் காலநிலை மாற்றத்தையே காரணமாக சொல்ல வேண்டும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அதன் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றத்தை கல்வித்துறை மூலம் புகட்ட நமது அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் எதிர்கால கனவுகளுக்கு கல்விதான் அடித்தளமாக விளங்குகிறது. அதனால்தான் காலநிலை கல்வி அறிவை ஒரு இயக்கமாக முன்னெடுக்க முடிவெடுத்துள்ளோம்.
சூழலியல் மன்றங்கள்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளில் சூழலியல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலைக்கு என்று கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். அரசு அலுவலர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி வழங்கப்படும். இந்தியாவிலேயே காலநிலை மாற்றம் குறித்து ஆராய மாநாடு நடத்தியது தமிழ்நாடு மட்டும்தான்.
நமது அரசு வெப்ப அலையை இயற்கை பேரிடராக அறிவித்து, வெப்ப அலையால், உயிரிழக்க நேரிட்டால் ரூ.4 லட்சம் நிவாரணம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. வெப்ப நிலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவ வசதிகளுக்கும் ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கவும் மாநில பேரிடர் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்." என பேசினார்.