துரோகம் செய்து விட்டு நண்பர்கள் போல் நடிக்கிறார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சமத்துவத்தைப் போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் சென்னை டான் போஸ்கோ பள்ளியில் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், எந்த மதமாக இருந்தாலும் அன்பை போதிக்க வேண்டும். சாதி, மதம் வேறுபாடுகளை களைந்து ஒன்று பட்டு செயல்பட்டால் இந்தியா முன்னேறும்.
திராவிட மாடல்
தமிழகத்தில் 37 தேவாலயங்களை புனரமைக்க ரூ.1.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனித பயணம் செல்வோருக்கு ரூ.37,000 நிதி நேரடியாக வழங்கப்படுகிறது.
இந்த மேடையில் பேராயர்களுடன், பேரூர் ஆதீனமும் பங்கேற்றுள்ளார். இவ்விழாவை நடத்தக் கூடியவர் இந்து அறநிலையத்துறை அமைச்ச்சர் சேகர் பாபு. இதுதான் சமத்துவ விழா. இந்த சமத்துவத்தைப் போற்றுவதும் பாதுகாப்பதும்தான் திராவிட மாடல். திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்கக்கூடியவர்களுக்கு இது தான் பதில்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நின்றது திமுக. அதை ஆதரித்தது அதிமுக. சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அதனால்தான் தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் சிறுபான்மை அரசாக்கி இருக்கிறார்கள்.
துரோகம்
சிறுபான்மையின மக்களுக்கு துரோகங்களை செய்துவிட்டு, வாக்கு அரசியலுக்காக அவர்களின் நண்பர்களை போல் நடிக்கின்றவர்கள் இந்த நாட்டில் நிறைய பேர் உள்ளனர்.
மக்கள் நலன் அரசாக செயல்படுவதால்தான் மக்கள் தொடர்ந்து எங்களுக்கு வெற்றியை தருகிறார்கள். சிறுபான்மையினர் நலனில் உண்மையாக அக்கறையோடு இருப்பது திமுகதான். சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக திமுக அரசு எப்போதும் திகழும்.
மதசார்பின்மை என்ற சொல்லையே அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இதனால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பெரும்பான்மையை தரவில்லை. இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை" என பேசினார்