’ஊர்ந்து’ உறுத்தியிருந்தா ’தவழ்ந்து’-னு மாத்திக்கலாம் - அதிமுகவுக்கு ஸ்டாலின் நக்கல் பதிலடி
ஊர்ந்து என்ற வார்த்தையால் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினருக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
அதிமுகவினர் அமளி
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது.
அதில் அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக ஆட்சியை விமர்சித்திருந்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்துதான் சென்றது" என்றார்.
ஸ்டாலின் பதிலடி
உடனே அந்த வார்த்தையால் கொந்தளித்த அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அந்த வார்த்தையை நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் எழுந்து, "ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.
அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. அது உங்களுக்கு உறுத்தியிருந்தால், எதையோ குறிப்பிடுவதாக நீங்கள் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிடலாம். சபாநாயகர் அவர்களே 'ஊர்ந்து' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'தவழ்ந்து' என்று போட்டுக்கொள்ளுங்கள்" என்று நக்கலாக பதிலளித்தார். இது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.