பெரியாரை உலகின் சொத்தாக மாற்றி இருக்கிறோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திராவிட மாடல் குறித்து கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்றே போதும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
பெரியார் நினைவு நாள்
பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று (24.12.2024) சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை வேப்பேரி பெரியார் திடலில் டிஜிட்டல் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மு.க.ஸ்டாலின்
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'பெரியார் கைத்தடி' போன்ற நினைவு பரிசை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழ்க்கையில் எத்தனையோ பரிசுகளை பெற்று இருக்கிறேன். ஆனால் ஆசிரியர் வீரமணி வழங்கிய இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும்.
தாய் வீடு
இங்கு விரும்போதெல்லாம் தாய் வீட்டிற்கு வருவது போல் உணர்கிறேன். ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் உரிமைபெற வேண்டும் என்பதற்காக போராடியவர் ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். தமிழினம் சுயமரியாதை பெறுவதற்கு வாழ்நாளெல்லாம் உழைத்தவர் பெரியார்.
அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்தவர், அனைவரின் மனதுக்குள் இடம்பிடித்திருப்பவர் பெரியார். பெரியாரை உலகமயமாக்கி, உலகத்தின் பொதுச்சொத்தாக கொண்டு சேர்த்திருக்கிறோம்" என பேசினார்.