தமிழ்நாடு 3 முக்கிய சவால்களை சந்திக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தற்போதைய வரிப்பகிர்வு முறை தமிழ்நாட்டின் வளர்ச்சியை தண்டிக்கும் வகையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
16-வது நிதிக்கமிஷன்
அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று(17.11.2024) தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது.
இந்த நிலையில், இன்று(18.11.2024) 16-வது நிதிக்கமிஷனுடனான ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங்களை தீட்டி அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநிலங்களிடம்தான் உள்ளது.
15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41% உயர்த்தியதை நாங்கள் உளமாற பாராட்டுகிறோம். ஆனால் அறிவிப்புக்கு மாறாக 33.16% மட்டுமே பகிர்ந்து அளித்துள்ளது ஒன்றிய அரசு.
50 விழுக்காடு பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும். ஒன்றிய வருவாய்வில் மாநிலத்துக்கு வரி பகிர்வு 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும்.
மறுபகிர்வு முறை
தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து வழங்கி வரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தண்டிப்பதைப் போல தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்துள்ளது.
சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியைக் குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதால், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும்.
கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கியும், பல மாநிலங்களில் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த 45 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறையின் மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இயற்கை பேரிடர்
தமிழ்நாடு சந்தித்து வரும் 3 குறிப்பிடத்தக்க சவால்களை நிதிக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு புயல்கள் மற்றும் இடைவிடாத மழைப்பொழிவு மற்றும் வெள்ளத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.
இயற்கைப் பேரிழிவுகளினால் ஏற்படும் இழப்புகளை சரிசெய்ய பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளதால், வழக்கமான வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொள்ள உடனுக்குடன் நிதி வழங்க வேண்டும்.
நகர மயமாக்கல்
அடுத்தாக, தமிழ்நாட்டில் அதிகமாக வளர்ந்துவரும் முதியவர்களின் எண்ணிக்கையால் முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தை இன்று சந்தித்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்திரப்பிரதேச மாநிலத்தின் சராசரி அளவை விட 9.5 ஆண்டுகள் அதிகம்.
தமிழ்நாடு இதுவரை பெற்று வந்துள்ள மக்கள்தொகை அடிப்படையிலான பயன் வேகமாகக் குறைந்து வருவதையும் சமூகப் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது. எனவே எதிர்வரும் 10 ஆண்டுகளில் தமிழ்நாடு, தேவையான பொருளாதார வளர்ச்சியினை அடைவதுடன் சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும்.
மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. குறைவான நில வளம், நீர் வளம் ஒருபுறம், தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மறுபுறம். இவற்றுக்கு இடையே சென்னை போன்ற நகரங்களில் வாழ்ந்திடும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அமைத்திடத் தேவையான முதலீடுகளைச் செய்திடவும், உள்ளாட்சி அமைப்புகளின் தரமான சேவைகளைத் தொடர்ந்து வழங்கிடவும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேவையான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்" என பேசினார்.