இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Tamil nadu
By Karthikraja Jan 23, 2025 08:30 AM GMT
Report

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(23.01.2025) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தினார். 

‘இரும்பின் தொன்மை

இந்நிலையில் இன்று(23.01.2025) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தொல்லியல் துறை சார்பில், தயாரிக்கப்பட்ட ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டதோடு, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இரும்பு தொழில்நுட்பம்

இதை தொடர்ந்து அந்த நிகழ்வில் பேசிய அவர், இன்று அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று கூறியிருந்தேன். பலரும் அது என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அறிவிப்பு என்னவென்றால் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது.

இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே திரும்பவும் கூறுகிறேன், தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். 

mk stalin speech

5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இப்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள் இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு.4000ம் ஆண்டின் முற்பகுதிக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

ஆய்வு முடிவுகள்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகின் தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி பெறப்பட்ட முடிவுகளை, கூர்ந்து ஒப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கப் பெற்றன.

அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை எண்ணிப் பெருமிதத்துடன் கூறுவோம்.

தமிழ்நாட்டிற்கு பெருமை

இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்படும். தமிழ், தமிழ் நிலம், தமிழ்நாடு என நாம் இதுவரை சொல்லி வந்தவை இலக்கியப் புனைவுகள் அல்ல; வரலாற்று பெருமைகள். இது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களிற்கும் கிடைத்த பெருமை.

பழம் பெருமை பேசுவது புதிய சாதனையை படைக்க ஊக்கமாக அமைய வேண்டும். நமது பெருமைகளை நமது எதிர்கால தலைமுறைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம்" என பேசினார்.