ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான்.. காதுகள் இல்லை - விளாசிய முதலமைச்சர்!
ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
உங்களில் ஒருவன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ‘ஆளுநர் அரசியலில் தலையிடக் கூடாது என அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே.
அதற்கு மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் செவி மடுப்பார்களா?’என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு “இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும்போது, கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” எனக் கூறியுள்ளார்.
ஆளுநர்களுக்கு வாய் தான்
மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே? எனக் கேட்டதற்கு “எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன்.
தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்” என பதிலளித்துள்ளார்.