எனக்கு பதவியைப் பற்றி கவலை இல்லை; என் கவலை எல்லாம்... - முதல்வர் மு.க.ஸ்டாலின்
டங்ஸ்டன் திட்டத்திற்கு காரணம், நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம்
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான ஏல ஒப்பந்தம் கோரியது.
ஆனால் இந்த திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தினர். மேலும், இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
திட்டம் ரத்து
இதனையடுத்து இந்த திட்டத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த 23.01.2025 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நேற்று(25.01.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த டங்ஸ்டன் போராட்டக் குழுவினர் அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் இன்று மாலை மதுரை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அந்த பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு உற்சாக வரவேற்பளித்தனர்.
மு.க.ஸ்டாலின்
நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "டங்ஸ்டன் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அரிட்டாப்பட்டியை சேர்ந்தவர்கள் என்னை நேரில் சந்தித்து, “அரிட்டாப்பட்டிக்கு நீங்கள் வரவேண்டும். உங்களுக்கு பாராட்டு விழா நாங்கள் முன்னெடுக்க இருக்கிறோம்” என்றார்கள். ஆனால், இங்கு பாராட்டு பெறக்கூடியவர்கள் மக்கள் தான். நாங்கள், நீங்கள் என்று பார்க்காமல், டங்ஸ்டன் ரத்தை நமக்கான வெற்றியாகவே பார்க்கிறேன்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இதேபோன்ற விவசாயிகள் போராட்டம் 2 ஆண்டுகள் நடைபெற்றது. ஆனால் டங்ஸ்டன் போராட்டம் 3 மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு காரணம், மக்களாகிய நீங்களும், தமிழ்நாடு அரசும் வெளிப்படுத்தியிருக்கிற கடுமையான எதிர்ப்பு தான்.
பாஜகவே காரணம்
டங்ஸ்டன் திட்டத்திற்கு முதன்மை காரணம், நாடாளுமன்றத்தில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம் தான். அந்த சட்டத்தை திமுக கூட்டணி கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தது. ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, அந்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.
டங்ஸ்டன் வந்தால் முதலமைச்சராக தொடரமாட்டேன் என சொன்னபோது, 'ஏன் அந்த வார்த்தையை சொன்னீர்கள்? அது அவசியம் இல்லையே' என அமைச்சர்கள் சொன்னார்கள். 'பதவியைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. மக்களைப் பற்றியும், அவர்களின் பிரச்னையைப் பற்றி மட்டும்தான் எனக்குக் கவலை' என சொன்னேன்.
அதைதொடர்ந்து இந்த திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தீர்மானத்தை ஆதரித்த கூட்டணி கட்சி, எதிர்க்கட்சி, மாற்றுக்கட்சி மற்றும் போராடிய உங்கள் அனைவர்க்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது உங்களுக்கான அரசு என பேசினார்.