டங்ஸ்டன் சுரங்கம் ரத்து; மக்களின் உணர்வுக்கு மத்திய அரசு பணிந்தது - முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Government Of India Madurai
By Karthikraja Jan 23, 2025 08:30 PM GMT
Report

மாநில அரசின் உறுதிக்கு மத்திய அரசு பணிந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் சுரங்கம்

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

டங்ஸ்டன் சுரங்கம்

இந்த திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சிகள் மற்றும் சூழலிய அமைப்புகளும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

திட்டம் ரத்து

இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். இந்நிலையில் இந்த திட்டத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு இன்று(23.01.2025) அறிவித்தது.

madurai tungsten mine auction cancel

இதனை அந்த பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

அந்த பதிவில், "நான் முதலமைச்சராக இருக்கும்வரை, என்னை மீறி #Tungsten சுரங்கம் அமையாது என்று உறுதிபடத் தெரிவித்தேன்! சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோம்! மக்களின் உணர்வுக்கும், மாநில அரசின் உறுதிக்கும் ஒன்றிய அரசு பணிந்துள்ளது! 

இனி, மாநில அரசின் இசைவு பெறாமல் இத்தகைய சுரங்க ஏல அறிவிக்கைகளை ஒன்றிய அரசு வெளியிடக் கூடாது; மாநில உரிமைகளுக்கு எதிரான சட்டங்களுக்கு அ.தி.மு.க.,வும் துணைபோகக் கூடாது" என தெரிவித்துள்ளார்.