தீரன் சின்னமலை நினைவு நாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.
தீரன் சின்னமலை
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவர் தீரன் சின்னமலை. திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சென்னிமலை அருகிலுள்ள செ. மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17ஆம் தேதி 1756 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி. இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை கற்று தேர்ந்த இவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடினார்.
217ஆம் நினைவு நாள்
1801ல் ஈரோடு காவிரி கரையிலும், 1802ல் ஓடாநிலையிலும், 1804ல் அரச்சலுாரிலும் நடந்த போர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி சின்னமலை பெரும் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஆங்கிலேயர்கள் இவரை 1805 ஜூலை 31ல் அவரை துாக்கிலிட்டனர். இருப்பினும் அவர் உடல் ஆகஸ்ட் 3ஆம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று மாவீரன் தீரன் சின்னமலை 217ஆம் நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மலர் தூவி மரியாதை
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
இந்நிகழ்வின் போது அமைச்சர்கள் ஏ.வ. வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.