ஹீரோவாக மாறிய மு.க.ஸ்டாலின் - ஜெயலலிதா பிறந்தநாளில் தமிழக அரசு செய்த செயலால் மக்கள் வியப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு செய்த செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை இன்று அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடைபெற்றன.
அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதனிடையே இன்று காலை நாளிதழ்களை பார்த்தப்போது அதில் இடம்பெற்ற ஒரு விளம்பரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. தமிழக அரசு சார்பில் வெளியான அந்த விளம்பரத்தில் ஜெயலலிதா போட்டோவுடன் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு சீர்மிகு பெருமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
பொதுவாக இதுவரை இப்படியான மாண்பை தமிழக அரசியலில் கண்டதில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சருக்கு திமுக அரசு இப்படியான மரியாதையை செய்த நிலையில் அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு எந்தவித முறையும் பின்பற்றிய மாதிரி நினைவில் இல்லை என அதில் கூறியுள்ளனர்.
ஜெயலலிதா இறந்தபோதும், அவரைப் பற்றி சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசித்த போதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை பெருமையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.