பாஜகவை வீழ்த்த பீகார் பயணம் - ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பீகார் செல்கிறார்.
மு.க.ஸ்டாலின்
பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேம்நாத் சோரன், உத்தவ் தாக்கரே,

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிபிஐ பொதுச்செயலாளர் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இன்று மாலை தனி விமானம் மூலம் செல்கிறார்.
பீகார் பயணம்
இதுகுறித்து உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும்.
அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் அன்பிற்குரிய நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன்.
இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை - ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.