தமிழ்நாடு முதலீட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 6,64,180 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அமெரிக்கா பயணம்
இந்த நிலையில் இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது. ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட 19 நிறுவனங்கள் இன்று உற்பத்தியை தொடங்க உள்ளன. இதன் மூலம் 65,000 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 17,616 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான துவக்க விழா இன்று நடைபெற உள்ளது.
மேலும், 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார். ஒட்டுமொத்தமாக 68 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்ட பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட இருப்பதாகவும், இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இதனையடுத்து தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 27ஆம் தேதி, 17 நாட்கள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்கா பயணத்தின் போது ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. குறிப்பாக இதுவரை தமிழ்நாட்டிற்கு வராத பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.