லட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்குவோம் - புதிய திட்டத்தை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்குவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குகேஷ்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் இள வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற குகேஷிற்கு பிரதமர் மோடி, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் என உலகம் முழுவதும் இருந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
5 கோடி பரிசு
வெற்றியுடன் நாடு திரும்பிய குகேஷிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக குகேஷ், விழா நடைபெற்ற கலைவாணர் அரங்கம் வரை திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விளையாட்டுத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். குகேஷ்க்கு தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் பங்கு
இந்த நிகழ்வில் பேசிய குகேஷ், 18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளேன். இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.
என்னுடைய வெற்றிக்கு தமிழக அரசின் பங்கு மிக முக்கியமானது. செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குத் திரும்பினால், என்னை பாராட்டவும், நிதியுதவி அளித்து ஊக்குவிக்கவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தயங்குவதில்லை.
செஸ் ஒலிம்பியாட் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. அதனை தமிழக அரசு அற்புதமாக நடத்தி இருந்தது. சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி நடக்காவிட்டால் கேண்டிடேட்ஸ் தொடருக்கு போயிருக்க மாட்டேன், கேண்டிடேட்ஸ் தொடருக்கு தேர்வானதன் வாயிலாக மட்டுமே நான் இன்று உலக சாம்பியன் ஆனேன்" என தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
இதனையடுத்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "புதிய சாதனை படைத்திருக்கிறார் நம்ம பையன், சென்னை பையன் குகேஷ். 18 வயதில் உலக சாம்பியனான குகேஷை உலகமே பாராட்டி வருகிறது. நம்ம குகேஷை நானும் பாராட்டுகிறேன்.
7 வயதில் பயிற்சிக்குள் நுழைந்து 9 வயதில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டம், 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று, இன்று உலக சாம்பியனாகி இருக்கிறார். இவை எல்லாவற்றையும் சாதிக்க குகேஷ் எடுத்துக் கொண்டது 11 ஆண்டுகள்தான்.
சிறப்பு அகாடமி
இதற்கு பின்னால் இருக்கக்கூடிய உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இலக்கை நோக்கிய பயணம் இதைத்தான் தமிழக இளைஞர்கள் எல்லோரும் இன்ஸ்பிரேஷனாக கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குகேஷின் வெற்றி இலட்சக்கணக்கான குகேஷ்களை உருவாக்கும்.
இந்தியாவில் இருக்கும் 85 கிராண்ட் மாஸ்டர்களில் 31 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இப்படி இன்னும் பல திறமையாளர்களை உருவாக்கும் நோக்கில் ‘Home of Chess Academy' என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும். இதன் மூலம் இன்றும் பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகுவார்கள் என்று உறுதியாக நான் நம்புகிறேன்" என பேசினார்.