நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம்! 'விராட் கோலிக்கு' முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி வாழ்த்து!
அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சாதனை படைத்த விராட்
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசினார். அவர் 113 பந்துகளில் 117 ரன்கள் குவித்து தனது 50வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இந்த சதத்தின் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசியா வீரர் என்ற முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குவியும் வாழ்த்து
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது "நம்பமுடியாத சாதனை! 50 ஒருநாள் சதங்கள்! விராட் கோலி, நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக் கோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது "இன்று விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை அடித்துள்ளார். அதோடு சிறந்த விளையாட்டு திறனையும், விடா முயற்சியையும் எடுத்துக்காட்டும் வகையில் செயல்படுகிறார்.
இந்த மைல்கல் அவரது அர்ப்பணிப்பு மற்றும் அதிகப்படியான திறமைக்கு சான்றாகும். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எதிர்கால சந்ததியினருக்கு அவர் ஒரு அளவுகோலை நிர்ணயித்து கொண்டே இருக்கட்டும்'' என தெரிவித்துள்ளார்.