நாங்களும் வரியை நிறுத்த ஒரு நொடி போதும் - கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
புதிய கல்விக்கொள்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை
கடலூரில் ரூ.704.89 கோடி மதிப்பிலான 602 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.384.41 கோடி மதிப்பிலான 178 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''எனது ஒரே இலக்கு மக்கள்தான். நான் செய்யவேண்டிய நன்மை மட்டுமே என் கண்களுக்கு தெரியும். அவதூறுகள், வீண் புகார்கள், வெட்டிப் பேச்சுகளில் நான் கவனம் செலுத்துவதில்லை. ரூ.1000 உரிமைத்தொகையை, என் அண்ணன் ஸ்டாலின் தரும் சீர் என பெண்கள் கூறுவது எனக்கான பெருமை.
ஸ்டாலின் கண்டனம்
கல்வியில் அரசியல் செய்வது நாங்களா? நீங்களா? மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்பது அரசியல் இல்லையா? பல்வேறு மொழிகள் கொண்ட நாட்டை ஒரே மொழி கொண்ட நாடாக மாற்றுவது அரசியல் இல்லையா? தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கும் வரியை தர முடியாது என்று கூற எங்களுக்கு ஒரு நொடி ஆகாது.
தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம். தமிழர்களின் தனித்துவ போராட்டக் குணத்தை பார்க்க ஆசைப்படாதீர்கள். மாநிலங்கள் வளர்ச்சியால் நாடுதான் பயன்பெறும்.
மத்திய அரசு மாநில வளர்ச்சியை தடுக்கிறது. மாநிலத்திற்கான நிதியை அளிக்க மறுக்கிறது தேசியக்கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி நடக்கிறது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.