இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் பட்டியல் - முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா?
இந்தியா டுடே வெளியிட்டுள்ள அதிகார மிக்க நபர்களின் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் இடம் பிடித்துள்ளார்.
அதிகாரமிக்க நபர்கள்
இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான டாப் 10 பட்டியலை இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் 5 மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்
இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8வது இடத்தில் உள்ளார். ஸ்டாலினுக்கு 8 வது இடம் அளித்ததற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளது.
மொழித் தடையால் ஸ்டாலினின் பேச்சு வடக்கு மாநிலங்களை அடையாமல் இருந்தாலும், தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தை எட்டுகிறது. திமுகவுக்கு லோக்சபாவில் 22 எம்பிக்கள், ராஜ்யசபாவில் 10 எம்பிக்கள் உள்ளதோடு தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி வகை சூடியுள்ளது.
எல்லா மாநிலங்களிலும் பாஜக சில தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட கிடைக்காமல் செய்தது பாஜகவுக்கு அதிக வருத்தத்தை அளித்தது. எனவே, தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் எஃகு போல திகழ்கிறார்.
அடக்கமான போர் வீரன்
2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதில் இருந்து, 2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா என கேட்டால், தந்தை மு. கருணாநிதியை போல் “எனக்கு என் உயரம் தெரியும்” என அடக்கமான போர் வீரனை போல் உள்ளார்.
டாப் 10 பட்டியல்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் பிரதமர் மோடியும், 2வது இடத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், 3வது இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, 4வது இடத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, 5வது இடத்தில் சந்திரபாபு நாயுடு ஆகியோர் உள்ளனர்.
6வது இடத்தில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், 7வது இடத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 8வது இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9வது இடத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 10வது இடத்தில் சாமாஜ்வாதி கட்சி தலைவரும் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் மத்திய அரசுக்கு கொடுத்துள்ள ஆதரவு மூலம் அதிகாரமிக்க நபர்களாக உள்ளனர். மம்தா பானர்ஜியும், மு.க.ஸ்டாலினும் பாஜகவின் நுழைவை தடுத்துள்ளனர்.