இன்றும் எங்களை இளமையாக இயக்குவது இவை மூன்றும்தான் - முதல்வர் ஸ்டாலின்
சிவா எழுந்தால் சிங்கம் எழுகிறது என ஆளும் தரப்பு அச்சம் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
நூல் வெளியீட்டு விழா
சென்னை கலைவானர் அரங்கில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி எழுதிய 5 நூல்கள் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிகழ்வில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், நடிகர் பிரகாஷ் ராஜ் என பலரும் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின்
இதில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "திமுக இளைஞரணி துவக்கப்பட்ட போது இருந்த 5 அமைப்பாளர்களில் திருச்சி சிவா ஒருவர். மிசா சிவா என்ற பெயரை திருச்சி சிவா என்று பெயரை மாற்றியவர் தலைவர் கலைஞர்.
அன்று 30 வயதை தொட்ட இளைஞராக இருந்த நாங்கள் இன்று 70 வயதை தொட்ட இளைஞராக தொய்வில்லாமல் பணியை தொடர்கிறோம். இன்றும் எங்களை இளமையாக இயக்குவது கழகம், கருப்பு - சிவப்பு, கலைஞர். இவை மூன்றும்தான். இன்று கலைஞர் இருந்திருந்தால் சிவாவை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்.
சிங்கம் எழுகிறது
நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக திருச்சி சிவா செயல்படுகிறார். இதுவரை நாடாளுமன்றத்தில் 526 விவாதங்களில் பங்கேற்று, 790 கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அதனால் தான் ஆளும் தரப்பு சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது என்பது போல அச்சம் கொள்கிறது.
எதிரிகளின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம். நாம் மாறவில்லை. நமது போராட்டக்களமும் மாறவில்லை. 75 ஆண்டுகளாக திமுகவின் பெயர் மாறவில்லை, கொடி மாறவில்லை.. சின்னம் மாறவில்லை. சிறைச்சாலை என்னும் பல்கலைகழகத்தில் நாங்கள் படித்ததால்தான் இன்றும் யாருடைய மிரட்டலுக்கும், அதட்டலுக்கும் பயப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
குடும்ப கட்சி
திமுக என்னைப் பற்றி குறிப்பிடும்போது 'கலைஞராக வாழும் தளபதி' என திருச்சி சிவா எழுதி இருக்கிறார். என் மீதான அன்பு மிகுதியால் அப்படி எழுதி இருப்பார். இனி இவர்தான் எங்கள் தளபதி என என்னை முதலில் அறி வித்ததே சிவாதான். அதனால் அந்த தலைப்பு வைத்திருக்கிறார். அதில் ஒரு திருத்தம். கலைஞராக வாழ கலைஞரால் மட்டும்தான் முடியும். கலைஞர் வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்.
எதிர்க்கட்சிகள், திமுகவை பார்த்து குடும்ப கட்சி என்றால் கோபம் வருவதே இல்லை; ஏனென்றால் குடும்பம் குடும்பமாக வந்து துன்பம், துயர் அனுபவித்து, நாட்டுக்கு உழைப்பவர்கள்தான் திமுகவினர்" எத்தனையோ தாய்மார்கள், தங்கள் பிள்ளைகளை இயக்கத்திற்கு தாரை வார்த்துக்கொடுத்ததால் வளர்ந்த இயக்கம் திமுக" என பேசினார்.