'ககன்யான்' திட்டம்: விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ISRO - மாஸ் காட்டும் இந்தியா!

India ISRO Chandrayaan-3
By Jiyath Oct 08, 2023 04:04 AM GMT
Report

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டம் தயாராகி வருகிரது. 

ககன்யான் திட்டம்

விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO). சந்திரயான் 3 எனும் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்திலும், சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்1' எனும் திட்டத்திலும் வெற்றி கண்டு சரித்திர சாதனை படைத்தது இஸ்ரோ.

மேலும்' சந்திரயான் 3' திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு 'இந்தியா' என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில் அதே வேகத்துடன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' என்ற திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது இஸ்ரோ. பூமியின் தாழ்வு வட்டபாதையில் 400 கிமீ உயரத்தில் ககன்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு, 3 நாட்கள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

நிலவில் தரையிறங்கும் முன் நாமக்கல் கிராமங்களில் தரையிறங்கிய சந்திரயான் 3 - எப்படி தெரியுமா?

சோதனை முயற்சி

விண்வெளிக்கு மனிதர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, மீண்டும் பூமிக்கு பத்திரமாக அழைத்து வர 'க்ரூ மாட்யூல்' கட்டமைப்பு அவசியம். இதற்காக சென்னையிலுள்ள கே.சி.பி. நிறுவனம் 2 'க்ரூ மாட்யூல்களை' வடிவமைத்து , இஸ்ரோவிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இதில் 3 விண்வெளி வீரர்கள் அமரும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ககன்யான் திட்ட சோதனைகளுக்காக ஒற்றை நிலை கொண்ட 'டிவி-டி1' என்ற சோதனை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 'க்ரூ மாட்யூல்' பொருத்தப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும். பின்னர் பூமியிலிருந்து 17 கிமீ உயரத்துக்கு ராக்கெட் சென்றதும் 'க்ரூ மாட்யூல்' பிரிக்கப்படும். பூமியை நோக்கி க்ரூ மாட்யூல் வரும்போது அதன் வேகத்தை குறைக்க பாராசூட் பயன்படுத்தப்படும்.

இதன் காரணமாக மிதமான வேகத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடல் பகுதியில் 'க்ரு மாட்யூல்' பத்திரமாக தரையிறங்கும். இந்த மாத இறுதியில் இந்த சோதனையை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு பயணம் செய்யும் வீரர்களை பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு இந்த சோதனை உதவியாக இருக்கும்.

மேலும் தரையிறங்கும்போது அதில் காணப்படும் அழுத்தம், வெப்ப நிலை பற்றி அறிந்து கொள்ள இந்த சோதனை முயற்சி உதவும் என்றும் இந்த முயற்சி வெற்றி அடைந்தால் ககன்யான் திட்டத்தில் இது ஓர் மைல்கல் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.