அமேசான் ரிட்டர்ன் பார்சலில் பூனை; 6 நாட்கள் உணவின்றி தவிப்பு - தப்பித்தது எப்படி?
தவறுதலாக அமேசான் பார்சலில் அனுப்பப்பட்ட பூனை 6 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.
பூனை மாயம்
அமெரிக்காவின் உட்டாவைச் சேர்ந்த கேரி கிளார்க் என்ற பெண் கலேனா என்று பெயரிடப்பட்ட பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்த பூனையை திடீரென காணாமல் போயுள்ளது. இதனால் அந்த பெண் பூனையை பல இடங்களிலும் தேட தொடங்கியுள்ளார்.
மேலும், தொலைந்து போன செல்லப்பிராணிகளை குறித்து பதிவிடும் பேஸ்புக் பக்கத்திலும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் அந்த பூனை 1,000 கி.மீ தொலைவில் கலிஃபோர்னியாவில் இருந்துள்ளது.
இவர் அமேசான் ரிட்டர்ன் பாக்ஸில் ஷுக்களை அனுப்பும்போது தவறுதலாக பூனையையும் அனுப்பியுள்ளார். இதனால் அந்த பூனை உணவு, தண்ணீர் எதுவும் இன்றி 6 நாட்கள் பாக்ஸில் இருந்துள்ளது. ஆனால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பூனை உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிப்பு
இதனையடுத்து பூனையின் மைக்ரோசிப்பை ஸ்கேன் செய்த கால்நடை மருத்துவர் ஒருவர், அதன் உரிமையாளர் கேரி கிளார்க்கை அழைத்து பூனை கண்டுபிடிக்கப்பட்டதை குறித்து தெரிவித்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த அவர் அடுத்த நாள் கலிஃபோர்னியாவுக்கு விமானத்தில் பயணித்து பூனையை அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து கேரி கிளார்க் கூறுகையில் "நான் அவளை மீண்டும் கட்டிப்பிடித்தபோது, கலேனா உடனடியாக நடுங்குவதை நிறுத்தி என் கைகளில் ஓய்வெடுத்தாள்.
ஒல்லியாக இருந்தபோதிலும், லேசான நீரிழப்பு இருந்தபோதிலும் அவளுடைய ரத்த ஓட்டம் இயல்பானதாக இருந்தது. இந்த சம்பவம், அனைத்து செல்லப்பிராணி உரிமையாளர்களும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் அணிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.