அண்ணாமலை விவரமானவர் என இவ்வளவு நாள் நினைத்தேன்..ஆனால் - அமைச்சர் துரைமுருகன்!
அண்ணாமலை விவரம் புரிந்தவர் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன் என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
துரைமுருகன்
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 5 நகர பேருந்துகள் மற்றும் 17 புறநகர பேருந்துகள் என மொத்தம் ரூ.8.43 கோடி மதிப்பீட்டில் 22 புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் சேர்க்காடு கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 2 வழிதடப் பேருந்துகள் நீட்டிப்பு சேவை இன்று தொடங்கப்பட்டது.
இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது,
”வேலூர் புதிய பேருந்துநிலையம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஏடிஎம் மையம், மருந்தகம், உணவகம் உள்ளிட்ட வசதிகள் இல்லாதது மற்றும் கடைகள் அப்படியே இருப்பது குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியர் ஒரு மாதத்தில் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்.
அண்ணாமலை
வயநாடு பேரிடர் இதயம் உள்ளவர்களை எல்லாம் உருகவைத்து, அழவைத்த துயர சம்பவம். அதைக்கூட நாங்கள் பேரிடராக அறிவிக்க மாட்டேன் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அவர்களிடத்தில் இருப்பது இதயமா? கல்லா என்று தெரியாது.
மேகேதாட்டு பிரச்சினையில் அண்ணாமலை கூறிய கருத்துக்குப் பிறகு நான் அவரை விவரம் புரிந்தவர் என்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். அத்தனை பேரை சமாளிக்கிறார் என்று அவரைப் பற்றி பலரிடம் கூறி இருக்கிறேன். ஆனால், அவர் விவரமே இல்லாதவர் என தெரிகிறது” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் சுனில்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் குணசேகரன், வேலூர் மண்டல பொது மேலாளர் கணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.