"விரைவில் தலைகள் சிதறும்" - திருச்சி எஸ்.பி.க்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்த சிறுவர்கள்
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இன்ஸ்டாகிராமில் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி
திருச்சியில் கடந்த நவம்பர் 22ம் தேதி பிரபல ரவுடியாக இருந்த கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இந்நிலையில் கடந்த வாரம் இன்ஸ்டாகிராம் தளத்தில், "கொம்பன் ஜெகன் டீம் (Komban_jegan_team)" என்ற முகவரியில் இருந்து, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், புகைப்படத்தை பகிர்ந்து, அத்துடன் "விரைவில் தலைகள் சிதறும்" என "Komban Brothers" என்ற பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இது திருச்சி மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனிப்படை அமைக்கப்பட்டு, பதிவை வெளியிட்டது யார் என்று விசாரித்து வந்தனர். விசாரணையில் 16 வயதுடைய 2 சிறுவர்கள் தான் இந்த பதிவு செய்தனர் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தென்காசியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
எச்சரிக்கை
மூவரும் சிறுவர்கள் என்பதால், சமூக வலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையில் பதிவிடாமல், சமூக வலைத்தளங்களை கவனமாக கையாள வேண்டுமென கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் இதுபோன்ற செயல்களை தங்களது பிள்ளைகளை ஈடுபடாமல் வைப்பதற்கு நல்வழியை காட்டுங்கள் என அறிவுரை செய்தார்.
மேலும், இதில் சம்மந்தப்பட்ட 17 வயதுடைய நபரை தேடிவருகின்றனர்.
இதுபோல பொதுமக்கள் மத்தியில் கலவரம், பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.