மைக்கை தள்ளிய எம்எல்ஏவின் பி.ஏ - மேடையில் முதுகில் குத்திய அமைச்சர்!
மேடையில் அமைச்சர் நாசர் உதவியாளரை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் நாசர்
திருவள்ளூர், திருத்தணியில் அப்பகுதி திமுக சார்பில் உறுப்பினர்கள் கூட்ட நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, திமுகவுக்கு வலுவான சித்தாந்தம் இருப்பதால், திமுகவினர் துணிச்சலுடன் நடக்க முடியும் எனக் கூறி மத்திய அரசின் திட்டங்கள் குறித்து குற்றஞ்சாட்டி தீவிரமாக பேசி வந்தார்.
பரபரப்பு
அப்போது, மேடையில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் சதீஷ் அமைச்சரின் பின்பக்கம் சென்றார். அப்போது அவர், தவறுதலாக மைக் வயரை மிதித்ததில், மைக் கீழே விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர்,
அவரை முதுகில் முழங்கை வைத்து தாக்கி, பேச்சை தொடர்ந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே பொது இடங்களில் அமைச்சர்கள் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது.