தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாமா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாமா? என்பதற்கு சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
பைக் டாக்சி
தமிழ்நாட்டில், பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்தை தவிர்த்து, பேருந்து வழித்தடம் இல்லாத பகுதிகளுக்கு செல்லவோ, அவசர காலத்தில் விரைந்து செல்லவோ பொதுமக்கள் ஆட்டோவை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.அதற்கு தீர்வாக சென்னை போன்ற பெரு நகரங்களில் பைக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சூழலில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில்
அவர் கூறியதாவது, "பைக் டாக்சிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிரிப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது.
சிவசங்கர்
இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது. பைக் டாக்சி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது.
இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்சிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது. தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். விதிகளின்படி பைக் டாக்சிகள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.