மோடி இந்தியாவிற்கு தான் அரசர்; தமிழகத்தில் என்றுமே திமுக தான் - அமைச்சர் சேகர் பாபு!
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
சென்னை கிழக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் காலம் உள்ள வரை கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் "நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறைத்தது போல் செய்து காட்டியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
சொன்னதையும் சொல்லாததையும் செய்து காட்டுவார். பிரதமர் மோடி இந்தியாவிற்கு வேண்டுமானால் அரசராக இருக்கலாம் ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை என்றுமே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான்.
திராவிட மண்
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து நிற்கும் கட்சிகள் டெபாசிட் தொகையை இழக்கும் வகையில் எங்களது கழக பணிகள் இருக்கும்.
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது. இது திராவிட மண் இன்னும் கால் நூற்றாண்டுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று தெரிவித்துள்ளார்.